பக்திப் பாடலாக மாறிய இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்!

Prabha Praneetha
2 years ago
பக்திப் பாடலாக மாறிய இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் இளையராஜாவின் மயக்கும் இசையில் 1987-ம் ஆண்டு வெளி வந்த நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

மூன்று தேசிய விருதுகளை வென்றதோடு இளையராஜாவின் 400 வது படம் எனும் சிறப்பும் வாய்ந்த நாயகன் படத்தில் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகி இருந்தாலும் குறிப்பாக இந்த பாடல் அந்நாளைய இளம் ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றது.

எப்போது கேட்டாலும் உற்சாகத்தை வரவழைக்கும் துள்ளலான மெட்டில் உருவான இப்பாடலுக்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் உண்டு.

ஆம். இப்பாடலை நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு மாற்றாக ஒரு தாலாட்டு பாட்டாகதான் இளையராஜா முதலில் உருவாக்கினாராம் .

ஆனால் இயக்குனர் மணிரத்தினம் இப்பாடலை ஒரு துள்ளலான பாட்டாக மாற்ற முடியுமா என கேட்க அதன் பின்னரே இதை குத்து பாட்டாக இளையராஜா மாற்றினாராம். இதை ஒரு மேடையில் அவரே கூறியுள்ளார்.

இப்படி பல வகையில் சிறப்பு வாய்ந்த இப்பாடல் தற்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு வங்காள மொழியில் பக்தி பாடலாக மாறி அதிலும் ஹிட் அடித்து வருகிறது. ஆம். ஆண்டுதோறும் நவராத்திரி திருநாளை வங்காளிகள் துர்கா பூஜையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு அதையொட்டி, ‘நிலா அது வானத்து மேலே’ பாடலின் மெட்டில் அதை துர்க்கையம்மனின் பக்தி பாடலாக மாற்றியமைத்துள்ளார் வங்காள நடிகர் கரஜ் முகர்ஜி.

மேலும் புகழ்பெற்ற பாடகர் உஷா உதுப், அவருடன் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இணையத்தில் வைரலாக உலா வருகிறது.

அண்மையில் சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்தில் இளையராஜாவின் 'பேர் வெச்சாலும்' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் அலாதி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இளையராஜாவின் மற்றொரு பழைய பாடல் பக்திப் பாடலாக உருமாற்றம் பெற்று வெற்றி பெற்றிருப்பது இளையராஜாவின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றி உள்ளது.