திரைவிமர்சனம் - உடன் பிறப்பே

#TamilCinema #Film
திரைவிமர்சனம் - உடன் பிறப்பே

தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - இரா.சரவணன்
இசை - இமான்
நடிப்பு - ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி
வெளியான தேதி - 14 அக்டோபர் 2021
நேரம் - 2 மணிநேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

எத்தனை சென்டிமென்ட் படங்கள் வந்தாலும் சினிமாவில் அழிக்க முடியாத ஒரு சென்டிமென்ட் அண்ணன், தங்கை சென்டிமென்ட். பாசமலர் தொடங்கி இன்று வரை பல படங்களுக்கும் அந்த அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை பல இயக்குனர்களும் பல்வேறு விதமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்த உடன்பிறப்பே தலைப்பிலிருந்தே இது ஒரு பாசக்கதை என்பது படம் பார்க்காமலேயே புரிந்துவிடும். அண்ணன், தங்கை பாசத்தை இருவருமே பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அதை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

கிராமத்தில் சசிகுமார், ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கை. ஜோதிகாவின் கணவர் ஆசிரியராக இருக்கும் சமுத்திரக்கனி. அடிதடி, ஊர் பஞ்சாயத்து என இருக்கும் சசிகுமார் நடவடிக்கை பிடிக்காமல் இருக்கும் சமுத்திரக்கனி, அதனால் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளில் பையனை பறி கொடுக்கிறார். இனி, ஜென்மத்திற்கும் சசிகுமாருடன் உறவு இல்லை என பிரிந்து செல்கிறார். தனது அண்ணனும், கணவனும் சேர மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறார் ஜோதிகா. பிரிந்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஜோதிகாவின் 50வது படம். தன்னுடைய 50வது படம் ஒரு குடும்பக் கதையாக இருக்கட்டும் என ஜோதிகா ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. அவருக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரமாக படத்தைத் தாங்கிப் பிடிக்கும் தராசாக இருக்கிறார். ஒரு பக்கம் கணவர் சமுத்திரக்கனி, மற்றொரு பக்கம் அண்ணன் சசிகுமார். இருவரையும் விட்டுக் கொடுக்காமல் எப்படி பேலன்ஸ் செய்ய வேண்டுமோ அப்படி செய்கிறார். தஞ்சாவூர்ப் பெண்ணாகவே மாறியிருக்கிறார் ஜோதிகா.

அண்ணனாக சசிகுமார். ஏற்கெனவே பல குடும்பப் பாங்கான படங்களில் அதிரடி ஆக்ஷன் காட்டியவர் சசிகுமார். இந்தப் படத்தில் ஒரு இளைஞனுக்கு அப்பாவாகவும் நடிக்க சம்மதித்திருக்கிறார். அப்பா தான் என்றாலும் அதிரடிக்குக் குறையாக ஒரு கதாபாத்திரம். தங்கை மீதான பாசத்தில் எல்லைகளைக் கடந்து நிற்கும் அதே தமிழ் சினிமாவின் அண்ணன்.

விநோதய சித்தம் படத்தில் வித்தியாசமான சமுத்திரக்கனியைப் பார்த்துவிட்டு, மறுநாளே இந்தப் படத்தையும் பார்த்தோம். மீண்டும் வழக்கமான சமுத்திரக்கனி வந்துவிட்டாரே என்று வருத்தப்பட வைத்தது. சாதாரணமாக அட்வைஸ் செய்பவர் இந்தப் படத்தில் ஊருக்கு மட்டுமில்லை போலீஸுக்கும் சேர்த்து அட்வைஸ் செய்கிறார். ஊருக்கு இப்படி ஐந்து பேர் இருந்தால் போதும் சட்டத்தை மீறி யாரும் நடக்க மாட்டார்கள்.

கிராமத்துப் படங்களா நகைச்சுவைக்கு உடனே அழையுங்கள் சூரியை என்ற நிலைதான் உள்ளது. அந்த நம்பிக்கையை ஏமாற்றாமல் காப்பாற்றுகிறார் சூரி.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களும் உண்டு. ஆனால், அனைவருமே ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள். சசிகுமார் மனைவியாக சிஜா ரோஸ். அமைதியான அழகான முகம். அதற்குள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தது ஆச்சரியம். வில்லனாக கலையரசன், அவரது அப்பாவாக ஊரின் பெரிய மனிதர் ஆடுகளம் நரேன். சசிகுமாரின் உறவினர்களாக வேலராமமூர்த்தி, தீபா. சசிகுமாரின் மகனாக புதுமுகம் சித்தார்த், ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரக் காரணமாக இருக்கிறார்கள்.

இமான் இசையில் அண்ணே...யாரண்ணே... பாடல் டைட்டில் பாடலாக இருந்தாலும் அந்தப் பாடலையே படம் முழுவதும் பின்னணி இசைக்குப் பயன்படுத்தி இருக்கிறார் இமான். சசிகுமார் வரும் போதெல்லாம் ஒரு தீம் மியூசிக்கைத் தெறிக்க விடுகிறார். அண்ணாத்த படத்திற்கு இசையமைக்கும் போதே இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பார் போலிருக்கிறது. இந்த இரண்டு திம் மியூசிக்கை வைத்து படம் முழுவதும் பின்னணி இசையே ஒப்பேற்றி இருக்கிறார். பின்னணி இசை என்றால் வாசித்துத் தள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை இமான். ஆங்காங்கே அமைதியாகவும் இருக்கலாம். உணர்வு பூர்வமான படம் என்பதால் இப்படியா இடைவெளி விடாமல் வாசிப்பது ?.

தஞ்சாவூர்தான் படத்தின் கதைக் களம். ஆனால், பச்சைப் பசேல் என வயல்வெளிகளைக் காட்டாமல் இருவரது வீட்டைச் சுற்றியே வேல்ராஜின் காமிரா நகர்ந்துள்ளது. சில வழக்கமான க்ளிஷேவான காட்சிகள் படத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது.

தன் குழந்தையை விட அண்ணனின் குழந்தைதான் முக்கியம் என எந்த அம்மா நினைப்பார் என்பது பெரும் கேள்வியாக உழல்கிறது. அது என்ன என்பது படத்தைப் பார்த்தால் தெரியும்.

குடும்பப் பாங்கான கதைகள் வருடத்திற்கு ஒன்றிரண்டு தான் வருகின்றன. அந்த விதத்தில் இந்த உடன்பிறப்பே கொஞ்சம் உருகவும் வைத்துள்ளது.

உடன்பிறப்பே - உயிரினும் மேலான...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!