கமலுக்கு சூர்யா கொடுத்த பதில்
சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் (நவம்பர் 2) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், தமிழ், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய் பீம் படத்தை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதே போல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது.
பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிலளித்துள்ள நடிகர் சூர்யா, நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.