அண்ணாத்தா திரைப்பட விமர்சனம்

#TamilCinema #Film
அண்ணாத்தா திரைப்பட விமர்சனம்

இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர்
வெளியான தேதி - 4 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே தங்களுக்கு கொண்டாட்டமாக இருக்க வேண்டுமென ரஜினி ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு எண்ணம் இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில படங்களாகவே அப்படியான ஒரு கொண்டாட்டத்தை ரஜினி ரசிகர்களால் கொண்டாட முடியாமல் தான் இருந்தது. அவரை வேறு ஒரு திசையில் திருப்பிவிட்டுவிட்டார்களோ என ரசிகர்கள் யோசித்தார்கள்.

ஆனால், மீண்டும் முத்து ரஜினிகாந்த் மாதிரி அவர் எங்கள் சொத்து என ரஜினி ரசிகர்கள் முழுமையாகக் கொண்டாடும் விதத்தில் வந்திருக்கும் படம்தான் இந்த அண்ணாத்த.

குறுகிய காலத்தில் சிவா இயக்க ஒப்புக் கொண்ட படம் என்பதால் அவர் கதைக்காகப் பெரிதும் யோசிக்கவில்லை. விஸ்வாசம் ஸ்டைலில் கிராமம், குடும்பம், உறவினர்கள், என முதல் பாதியையும், வேதாளம் போல தங்கைக்காக எதையும் செய்யத் துணியும் பாசமான, மாஸான அண்ணனாக இரண்டாவது பாதியையும் கலந்தடித்து ரஜினிகாந்த் என்ற ஒற்றை சொல்லில் ரசிகர்களை மயங்க வைத்திருக்கிறார். வேறு எதையும் யோசிக்க விடாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு காட்சியில் கூட ரஜினிகாந்த் மிஸ் ஆகாத அளவுக்கு படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.

ஊரும் உறவினரும் கொண்டாடும் அண்ணாத்த ரஜினிகாந்த். தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அதீத பாசம் வைத்துள்ளவர். அண்ணன் சந்தோஷமே தனது சந்தோஷம் என தனது காதலை மறைத்து அண்ணன் ரஜினி பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ஆனால், காதலனின் சூழ்நிலை அவரை திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் ஓட வைக்கிறது. தங்கை ஏன் ஓடிப் போனாள் என்பது அறிந்து அண்ணன் ரஜினிகாந்த் தங்கையைத் தேடி கோல்கட்டா போகிறார். அங்கோ, தங்கை ஏழ்மை நிலையில் பெரும் சிக்கலில் இருக்கிறார். அது ஏன், அண்ணாத்த தங்கைக்காக என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

எழுபது வயதில் ரஜினிகாந்த்திடம் இப்படி ஒரு எனர்ஜியா என காட்சிக்குக் காட்சி ஆச்சரியப்பட வைக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு எப்படியான மாஸ் சீன், வசனம் இருந்தால் பிடிக்குமோ அதை நாடி பிடித்துப் பார்த்தது போல படம் முழுவதும் வைத்திருக்கிறார். ரஜினியின் காமெடி நடிப்பே தனி ரகம். இடைவேளை வரை முத்து ரஜினியை நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அவரும், சூரியும் கிராமத்துக் குசும்பு நகைச்சுவையில் கலகலப்பை அள்ளித் தெளிக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் பாட்ஷா, படையப்பா, அருணாச்சலம் என அந்தக் கால ரஜினிகாந்த் போல ஆக்ஷனில் அசத்துகிறார். இப்படியான ரஜினிதானே அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். தங்கை சென்டிமென்ட்டில் ரசிகர்கள் கண்கள் கலங்க வந்ததைப் பார்க்க முடிந்தது.

ரஜினிகாந்த் ஜோடி என்பதால் நயன்தாரா பெரிய மனது வைத்து பெருந்தன்மையுடன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைவுதான். பார்த்ததும் பற்றிக் கொள்ளும் காதல், உடனே டூயட் எல்லாம்தான் ரொம்ப ஓவர். சில முக்கியக் காட்சிகளில் நயன்தாரா இல்லவே இல்லை, உதாரணம் கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வுகள்.

அன்பான தங்கச்சி, பின்னர் அழுகாச்சி தங்கச்சி என அழுது தீர்த்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். தங்கையென்றாலும் படத்தின் கதாநாயகி இவர்தான். அண்ணன் சந்தோஷம் தான் தன் சந்தோஷம் என்றவர் அண்ணன் பாசம், தலைகுனிவு பற்றிக் கவலைப்படாமல் ஓடிப் போவது நம்பும்படி இல்லை.

மீனா, குஷ்பு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்களோ என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ரஜினியின் முறைப் பெண்களாக வந்து அபத்தமான காமெடி செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ரஜினிக்காக நடிக்க வேண்டும் என நடித்திருப்பார்கள் போலிருக்கிறது.

தம்பி வில்லனாக அபிமன்யு சிங், அண்ணன் வில்லனாக ஜெகபதி பாபு. முதலாமவர் ஹிந்தி வில்லன் போலவும், இரண்டாமவர் தெலுங்கு வில்லன் போலவும் இருக்கிறார்கள். ஹிந்தி, தெலுங்கில் படம் வெளியாவதற்காக இப்படி வைத்துவிட்டார்கள்.

ரஜினியின் அட்வைசால் கெட்டவனாக இருந்து நல்லவான மாறும் ஊர் பெரிய மனிதராக பிரகாஷ்ராஜ். ரஜினியுடனேயே இருக்கும் உதவியாளராக சூரி. ஓரிரு காட்சிகளில் வந்து போகும் இன்னும் சில பலரும் உண்டு.

இமான் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ரசிகர்களுக்கு ஒன்று, டூயட்டிற்கு ஒன்று, சென்டிமென்ட்டிற்கு ஒன்று, பின்னணி இசைக்காக ஒன்று என வெரைட்டி கொடுத்திருக்கிறார். ரஜினியுடன் முதல் படம், தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.

பக்கா கமர்ஷியல் மசாலா படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றியும், ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயனும் கை கொடுத்திருக்கிறார்கள். ரஜினி படத்திற்கு என்ன வேகம் வேண்டும், எப்படி விறுவிறுப்பு வேண்டும் என பார்த்துப் பார்த்து தொகுத்திருக்கிறார் எடிட்டிர் ஆண்டனி ரூபன்.

விஜய் நடித்த திருப்பாச்சி உள்ளிட்ட சில பல படங்களின் சாயல்கள் இப்படத்தின் காட்சிகளாக வந்து போகின்றன. கர்ப்பிணியான கீர்த்தி சுரேஷை கிளைமாக்ஸில் அப்படி ஓட விடுகிறார்கள். வழக்கமான க்ளிஷேவான சில காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் மீறி ரஜினிகாந்த் காட்டும திரை மேஜிக் அவற்றை மீறி படத்தை ரசிக்க வைக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!