இன்றைய வேத வசனம் 14.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
மீன் விற்கும் மீன்காரி, தன் மீன்களை எல்லாம் விற்றுவிட்டு வெறும் கூடையோடுகூட தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் திடீரென்று பெருமழை பெய்யத் துவங்கிவிட்டது.
இரவு நேரத்தில், மழையில் மிகத் தூரமுள்ள தன் வீட்டிற்குத் திரும்ப முடியாது என்று அறிந்த மீன்காரி, ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டினாள்.
அது ஒரு பூக்காரியின் வீடு; அவள், வந்தவளை உபசரித்து, தங்கும்படி ஏற்பாடுகளை செய்து தந்தாள். பூக்காரியின் வீட்டைச் சுற்றிலும் அழகிய மல்லிகை மலர்கள், இனிமையான மணத்தை வாரி வீசிக்கொண்டிருந்தது.
மீன்காரிக்கு தூக்கம் வரவில்லை. அந்த மலர்களின் மணம் அவளுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. இனிமையான அந்த வாசனை அவளுக்கு வாந்தியைக் கொண்டு வந்தது.
கடைசியில் தன் மீன் கூடையை எடுத்து அதற்குள் தன் முகத்தை வைத்துக்கொண்டு, தனக்குப் பிரியமான மீன் வாசனையோடு, இனிமையாய் தூங்கினாள்!
அதுபோலவே, பாவியால் பரலோகத்தில் வாசம் செய்ய முடியாது. அவனே தெய்வீக மகிமையின் பிரசன்னத்தில் அமர்ந்திருக்க முடியாமல், தானே பின்னிட்டு ஓடி பாதாளத்தில் போய் விழுந்து விடுவான்.
வேதவாசிப்பு, ஜெபம், சபை ஐக்கியம் உங்கள் உள்ளத்தில் வெறுப்பை ஏற்படுத்துமானால், நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
இன்று மீண்டும் ஆதி அன்புக்கு திரும்புங்கள்.
வெளிப்படுத்தல் 2:4
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
ஆமென்