இன்றைய வேத வசனம் 15.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
யோசேப்போடு தேவன் இருந்தபடியால் கள்ளமற்ற, கசப்பற்ற ஒரு மனிதனாக அவன் வாழ்ந்தான்.
அவனுடைய இருதயத்தில் பிறரை குறித்த வெறுப்பு, விரோதம், பகை, கசப்பு, பழிவாங்கும் சுபாவம் எதுவும் இருக்கவில்லை.
அவனுடைய சொந்த சகோதரர்கள் அவனுக்கு இழைத்த அநீதி கொஞ்சமல்ல. அவர்களால் அவனுக்கு நேரிட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல. ஆயினும், அவன் அவைகளை மனதில் வைத்துச் சிந்தித்து அவர்களை குறித்த வெறுப்போடும், கசப்போடும் வாழவில்லை.
காலம் வரும்போது அவர்களுக்கு தகுந்த பதில் செய்யலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. தேவன் அவனோடு இருந்ததால் அவருக்கு பிரியமற்ற காரியங்களை அவன் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை.
தேவனோடுள்ள ஐக்கியத்தின் பூரிப்பினால் தன்னை அக்கிரமமாக அல்லல் படுத்திய சகோதரர்களை கூட அவன் நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும் உபகாரியாக மாறினான்.
ஆம், கர்த்தர் நம்மோடிருந்தால் யாரைக் குறித்த எவ்வித கசப்பும், கோபமும், எரிச்சலும், பழிவாங்கும் உணர்வும் நம்மிடம் இருக்க முடியாது. சவுல் ராஜா கசப்பும், வெறுப்பும், எரிச்சலும் மிகுந்தவன். காரணம் என்ன? கர்த்தர் அவனோடு இருக்கவில்லை. கர்த்தர் அவனை விட்டு விலகியிருந்தார்.
கர்த்தர் நம்மோடிருந்தால் அன்பு, சமாதானம், பொறுமை, தாழ்மை ஆகியவை நம்மிடம் பெருகிக்கொண்டிருக்கும். நம்முடைய சமாதானத்தை கெடுக்கும் தன்மை உடைய கசப்பையும், வெறுப்பையும் அவர் நம் இருதயத்தை விட்டு விலக்குவார்.
இன்று சபைக்குச் சபை விரோதம். விசுவாசிக்கு விசுவாசி கசப்பு. ஊழியருக்கு ஊழியர் பொறாமை. இவைகள் எப்படி ஏற்படுகின்றன?
அன்பை அஸ்திவாரமாக கொள்ள வேண்டிய ஆவிக்குரிய மக்களிடம் பெறாமை, கோபம், கோள் சொல்லுதல், பகை உண்டாக்குதல், பழிவாங்கத் துடித்தல் போன்ற பாவங்கள் எப்படி நிரந்தரமாகிவிட்டன? சாத்தானின் சுபாவங்களோடு இவர்கள் ஏன் சங்கமித்துவிட்டார்கள்?
வேறொன்றுமில்லை யோசேப்போடே இருந்த தேவன் இவர்களோடு இல்லை. தேவனோடு இருக்கின்ற யோசேப்புகளாக இவர்கள் இல்லை. நான் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குதத்தம் இவர்களிடம் செயல்படவில்லை.
ஆம், தேவன் நம்மோடிருந்தால் அவர் விரும்புகிற சுபாவங்கள் தான் நம்மிடம் இருக்க முடியும். அதுதான் ஆவியானவரின் கிரியை.
இன்றும் உங்களுடைய கிரியை எப்படி இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து பாருங்கள். தேவன் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்!!
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:8-14)