ராணியின் உடல்நிலை பற்றி அரண்மனை மறைக்கிறதா?

பிரித்தானிய அரண்மனை வட்டாரங்கள் கூறுவதை விடவும் ராணியாரின் உடல் நிலை மோசமாக இருக்கலாம் என தொலைக்காட்சி பிரபலம் பியர்ஸ் மோர்கன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பிரித்தானிய தொலைக்காட்சி நேயர்களுக்கு நன்கு அறிமுகமான பியர்ஸ் மோர்கன், அரச குடும்பம் தொடர்பில் தமது கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருபவர்.
மட்டுமின்றி, இதனால் பலமுறை விவாதங்களிலும் சிக்கியுள்ளார். இருப்பினும் தமது கருத்துக்களை அவர் தொடர்ந்து வெளியிட்டே வருகிறார். இந்த நிலையில், ஞாயிறன்று லண்டனில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ராணியார் கலந்து கொள்ளாதது பலருக்கும் அவரது உடல் நிலை தொடர்பில் சந்தேகம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள், தொடர்புடைய தகவல்களை அறிக்கைவாயிலாக உறுதி செய்துள்ளனர். ராணியாரின் முதுகில் சுளுக்கு ஏற்பட்டதாகவும், இதனால் ஞாயிறன்று முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது தொடர்பில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் அறிவித்தனர்.
22 ஆண்டுகளுக்கு பிறகு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ராணியார் தவிர்த்துள்ளார். பதிலாக, இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் நடுநாயகமாக நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோர்கன் ராணியார் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு சொல்லப்பட்ட தகவலை விடவும் நிலைமை மிகவும் மோசமாக இருக்க வாய்ப்புள்ளதாலையே, நினைவேந்தல் நிகழ்வில் ராணியார் பங்கேற்கவில்லை என்கிறார் பியர்ஸ் மோர்கன்.
தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ராணியாரின் உடல்நிலை குறித்து பொதுமக்களாகிய நம்மிடம் கூறப்படாத ஒன்று உள்ளது, அரண்மனை வட்டாரங்கள் சொல்வதை விட இது மிகவும் தீவிரமான சூழ்நிலை என சூசகமாக பதிவிட்டுள்ளார்.



