இன்றைய வேத வசனம் 23.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
இன்று வசதியாக வாழவேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசைகள் பெரும்பான்மையான மக்களை ஆட்டிப்படைக்கின்றன.
எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும் பலர் நடுவில் மேட்டுக்குடியினர் போலத் தோன்றி மரியாதை பெறவேண்டும் என்ற ஆசைகள் ஆவிக்குரிய மக்களையும், தேவ பணியாளர்களையும் கூட இன்று ஆட்டிப்படைக்கின்றன.
ஏனென்றால் அவைகளுக்கு பின்னால் சாத்தானின் தந்திரம் இருக்கிறது.
இந்த உலகத்தின் மகிமையாவும் உமக்குத் தருகிறேன் என்று கூறி இயேசுவை மயக்க முயற்சித்த சாத்தான் இன்று ஏராளமான மக்களை மயக்கி தன் வலையில் விழ வைத்து கொண்டிருக்கிறான்.
இந்த ஆடம்பரம் என்ற மாயவலையை விரித்து விட்டு மறைந்து நிற்கும் சாத்தானை நாம் அடையாளம் கண்டு அவனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை போராட வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது.
இன்று சாத்தானுடைய தந்திரங்களின் உச்சகட்ட செயல்பாடுகளை எங்கும் காண முடிகிறது.
ஆடம்பரமான வாழ்க்கைக்கு இன்று ஆசீர்வாதமான வாழ்க்கை என்று பெயர் கிடைத்திருக்கிறது.
பொருளாதார ஆசிர்வாதங்களை மையப்படுத்தி செய்யப்படும் செழிப்பு உபதேச ஊழியங்கள் யாவும் சாத்தனுடைய நோக்கங்கள் நிறைவேற வழி வகுக்கின்றன.
பணம், பொருள், நிலம், செல்வம் என்று ஏராளமாகப் பெற்றுச் சுகபோகமாக வாழ அழைக்கும் செழிப்பு உபதேச ஊழியங்களின் பின்னால் தேவன் அல்ல சாத்தானே செயல்படுகிறான்.
ஏனென்றால், வேதம் எளிமையான, தாழ்மையான, ஆடம்பரமற்ற, அமைதியான ஒரு வாழ்க்கையையே ஆதரிக்கிறது.
பணம், பொருள், வீடு, வசதி ஆகியவை நமக்கு அவசியமே! ஆயினும் அவைகள் அளவுகளை தாண்டும் போது நம்மை தேவனுக்கு உகந்த நிலையில் இருந்து நம்மை தள்ளிவிடுகிறது.
பொருளாதார உயர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு மாயையான வாழ்க்கைக்கு நம்மை அழைத்து சென்று விடுகிறது.
சாலொமோனுடைய வாழ்க்கை ஆடம்பரங்களும் அதிக வசதிகளும் நிறைந்திருந்தது. அவனுக்கு அளவற்ற செல்வங்கள் இருந்தபடியால் விரும்பியபடியெல்லாம் வாழ்வதற்கு அவனுக்கு வாய்ப்பு இருந்தது.
அவன் வெள்ளியையும், பொன்னையும், வெளிநாட்டு பொருட்களையும் வாங்கி குவித்தான். ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்து விடுவது தான் ஆண்டவரின் ஆசிர்வாதம் என்று அனைவரின் கண்களுக்கும் தோன்றியது.
ஆனால், அவனுடைய ஆடம்பர வாழ்வு நிலை உண்மையில் பெரிய சாபமாகவே அவனக்கு இருந்தது.
ஆடம்பரம் தேவனை விட்டு அவனை வெகுதூரம் போக வைத்தது. அவனுடைய பகட்டான வாழ்க்கை அவனுடைய பரிசுத்த வாழ்க்கையை முழுவதுமாக கறைப்படுத்தியது. இறுதியில் தேவனைவிட்டு வழிவிலக செய்தது. (1 இராஜாக்கள் 11ம் அதிகாரம்)
ஆம், பணம், பொருள், வீடு, வசதி என்று ஏராளம் ஆசைகள் தோன்றும் போது அவைகள் சாத்தானின் சதி வலைகள் என்பதை புரிந்து கொண்டு அந்த ஆசைகளை எதிர்க்க தயாராகயிருப்போம். ஆடம்பர ஆசைகளுக்கு அடிமையாகி தேவ ஐக்கியத்தை இழந்து வாழ்க்கையை வீணாக்காத்திருப்போம்.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவ பக்தி மிகுந்த ஆதாயம் என்றும் உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்க கடவோம். என்று வேதம் நமக்குத் தெளிந்த ஆலோசனை தருகிறது. (#I_திமோத்தேயு 6:6-8)
ஆம், கர்த்தரை விட்டு நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மை இழுக்கும் தன்மை உள்ள எந்த ஒரு காரியத்தின் பின்னாலும் சாத்தான் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனுக்கு எதிர்த்து நிற்கத் தயாராகயிருப்போம்.
அப்போது தேவன் நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் போதுமானவராகயிருந்து அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யாக்கோபு 4:7)
ஆமென்!