சூரியா நடிப்பில் காட்டியதை. ராகவா லாரன்ஸ் செயலாக்கினார்.

Prasu
2 years ago
சூரியா நடிப்பில் காட்டியதை. ராகவா லாரன்ஸ் செயலாக்கினார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான 'ஜெய் பீம்' படம் வெளியான பின் கதையின் நாயகி நிஜ செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு பலரும் உதவ முன்வந்தனர்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ் அவரை நேரில் சந்தித்து கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார் ராகவா லாரன்ஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.
பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.
அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.
பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.