உலகத்துக்கே ஒரு பிரச்சனை உள்ளது - வைரல் ஆகும் மக்கள்செல்வனின் விழிப்புணர்வு வீடியோ
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றாக துணிப்பைகளையும் உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க பிளாஸ்டிக் பைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில், இந்த உலகத்தில் நம் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது, ஆனால் இப்பொழுது இந்த உலகத்திற்கே ஒரு பிரச்சனை உள்ளது. அதை யாராவது என்றைக்காவது கேட்டிருக்கின்றோமா? இனிமேலாவது கேட்கவேண்டும்.
உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஆசையும் கனவும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த உலகமும் ரொம்ப முக்கியம். நாம் சாப்பாட்டில் உப்பு, மசாலா போட்டு சாப்பிடுவோம், ஆனால் பிளாஸ்டிக் போட்டு சாப்பிடுவோமா? ஆனால் நாம் எல்லோரும் சாப்பிடுகிற சாப்பாட்டில் இந்த பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் மண்ணில், தண்ணீரில் கலந்து விலங்கு, மனிதன், பறவை, மீன் எல்லாவற்றையும் பாதிக்கின்றது.
நாம் பயன்படுத்தி இரண்டு பொருட்கள் மட்டுமே மக்காது. ஒன்று இந்த உலகத்தில் நாம் செய்த பாவம், இன்னொன்று இந்த பிளாஸ்டிக். பாவத்தை புண்ணியத்தை வைத்து சரி பண்ணி விடலாம், ஆனால் பிளாஸ்டிக்கை எதனாலும் சரி பண்ண முடியாது. இதற்கு தீர்வு என்னவென்றால் நம்முடைய தாத்தா, பாட்டி பயன்படுத்திய மஞ்சப்பை. நம்மால் மாசுபட்ட இந்த உலகத்தை காப்பாற்ற இந்த மஞ்சப்பை மீண்டும் வந்துள்ளது. மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம், பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொல்லுவோம். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.