அழகு, ஆரோக்கியம், சரும பராமரிப்பிற்கு உதவும் கற்றாழை!
கற்றாழை அழகு, ஆரோக்கியம், சரும பராமரிப்பு போன்ற பலவற்றிற்கு நல்ல தீர்வாக அமைவதால் கற்றாழையால் தயாரிக்கப்பட்டப் அழகு சாதனப் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதில் உள்ள மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகளவில் இருப்பதன் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின்A, B1, B2 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதன் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் மேலோங்கி உள்ளது. இதன் காரணமாகவே, கற்றாழையை நன்கு பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால், இதனைப் பதப்படுத்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நன்மைப் பயக்கும் என்பதால் அனைத்து வீட்டுத்தோட்டங்களிலும் கற்றாழையை வளர்க்கின்றனர். இதனை பெரியவர்கள் காலை எழுந்தவுடன் 1\2 டம்ளர் உணவாக அருந்துகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கற்றாழையில் வேறு என்ன நன்மைகள் உள்ளது? எப்படியெல்லாம் நம்முடைய உணவு முறைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
கற்றாழையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் பயன்கள்:
கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், வைட்டமின்A, B1, B2 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கற்றாழையில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப்பண்புகள் அதிகளவில் உள்ளதால் இதனை தோல் அழற்சி மற்றும் முடி பராமரிப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது.
செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:
உடலில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு கற்றாழை மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. எனவே நம்முடைய உணவு முறைகளில் இதனைப் பயன்படுத்தும்போது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தின் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவியாக உள்ளது.
நீரழிவு நோயாளிக்கான மருந்து:
கற்றாழை உணவில் சேர்த்துக்கொள்வது நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதன் மற்றும் விலங்குகளிடம் நடத்திய ஆய்வில், கற்றாழை இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதாகவும், இதன் மூலம் டைப் 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
உடல் எடை குறைவதற்கானத் தீர்வு:
கற்றாழையை உடல் எடை குறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவியாக உள்ளது. இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் மறைமுகமாக உடல் எடை குறைவதற்கு உதவியாக உள்ளது.
சருமத்தை பராமரிப்பதற்கு:
இதோடு வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது போன்ற பலவற்றிற்கு தீர்வாக கற்றாழை அமைகிறது. இதனை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊறவைத்த பின் கழுவினால் முகம் பளபளக்கும்.
நம்முடைய உணவு முறைகளில் பயன்படுத்தலாமா?
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் அதிகளவில் கற்றாழையில் இருப்பதால் உணவுகளில் சேர்ப்பது நல்லது.
கற்றாழை ஜூஸ்:
கற்றாழையை எளிமையாக சாப்பிடுவதற்கான ஒரே வழி கற்றாழையை ஜூஸ் செய்து சாப்பிடுவதுதான். முதலில் கற்றாழையின் மேல் தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீர், இனிப்பிற்காக தேன் கலந்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது நமக்கு பிடித்தமான ஜூஸ்களில் கலந்து பருகலாம்.
இதோடு கற்றாழை சாலட் கற்றாழை ஜெல்லை ஐஸ் க்யூப் போன்று தயாரித்து நாம் சாப்பிடலாம். இதனை நன்கு சுத்தம் செய்து சாப்பிடுவது அவசியம்.