முடிவுக்கு வந்தது 5 நாள் மீட்புப் போராட்டம்- 5 வயது சிறுவன் ராயன் உயிரிழந்த நிலையில் மீட்பு!

#world_news
Nila
2 years ago
முடிவுக்கு வந்தது 5 நாள் மீட்புப் போராட்டம்- 5 வயது சிறுவன் ராயன் உயிரிழந்த நிலையில் மீட்பு!

வடக்கு மொராக்கோவில் ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாட்களாக சிக்கியிருந்த 5 வயது சிறுவனை உயிருடன் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. கடினமானதும், உணர்ச்சிகரமானதுமான 96 மணித்தியால மீட்பு முயற்சியின் முடிவில், உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சனிக்கிழமையன்று மொராக்கோ அரசு வெளியிட்ட அறிக்கையில், சிறுவனை மீட்பவர்கள் காப்பாற்றுவதற்கு முன்பே இறந்துவிட்டதாகக் கூறியது. மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது சிறுவனின் பெற்றோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

“ராயன் அவ்ரம் என்ற குழந்தையின் உயிரைப் பறித்த சோகமான விபத்தைத் தொடர்ந்து, கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் பெற்றோருக்கு மன்னர் ஆறாம் முகமது தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை மாலை, வடக்கு மாகாணமான Chefchaouen இல் உள்ள இக்ரான் கிராமத்தில், தனது வீட்டின் அருகிலிருந்த 105 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ராயன் விழுந்தான்.

குழந்தையை தேடிய உறவினர்கள், கிணற்றிற்குள் விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் டோர்ச் லைட்டை ஓன் செய்த நிலையில் கைபேசியொன்றை கிணற்றிற்குள் விட்டுப்பார்த்த போது, சிறுவன் உள்ளேயிருப்பது தெரிய வந்தது. ‘என்னைத் தூக்குங்கள்’ என சிறுவன் கதறுவது அதில் பதிவாகியிருந்தது.

கிணற்றின் மேல் விட்டம் வெறும் 45cm (18 அங்குலம்) அகலமாக இருந்தது. கீழே மேலும் குறுகலாக இருந்தது. இதனால் மீட்புக்குழுவினர் கிணற்றிற்குள் இறங்க முடியாது.

இதையடுத்து, உலகின் கவனத்தையீர்த்த மாபெரும் மீட்புப் பணியை மொராக்கோ ஆரம்பித்தது.

கிணற்றின் அருகே பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. 105 அடி ஆளத்தை அடைந்ததும், சிறுவன் இருக்குமிடத்திற்கு கிடையாக சுரங்கம் தோண்டப்பட்டது. மண் சரிவு ஏற்படாமல் இந்த பணியை மேற்கொள்வது சிரமமாக இருந்தது. குழாய் பொருத்தி இந்த பாதை அமைக்கப்பட்டது.

நேற்று சனிக்கிழமை இரவு மீட்புகுழுவினர் ராயனை அடைவதற்கு முன்னரே அவர் சுயநினைவின்றியிருந்தது கமராவில் தெரிய வந்தது.

மீட்புக்குழுவினர் சிறுவனை அடைந்த பின்னர் நேற்றிரவு வெளியான தகவல்களில் சிறுவன் சுயநினைவுட் இல்லையென்றும், கடுமையான எலும்பு முறிவுகள், மூளை, நுரையீரல் பாதிப்பிற்குள்ளாகியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், சிறுவன் மீட்கப்பட்ட போதே உயிரிழந்திருந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்ற.

சிறுவன் மீட்கப்பட்டதும், பெற்றோர் நோயாளர் காவு வண்டியில் சுரங்கத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுமார் 1 மணித்தியாலம் சிறுவனின் உடல் சுரங்கத்திற்குள்ளேயே இருந்தது. பின்னர் மஞ்சள் நிற பையில் மூடப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

சிறுவன் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.