இந்தோனீசியாவில் பகாசா இந்தோனீசிய மொழியில் வெளியாகிறது ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம்
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் இந்தோனீசியாவில் வெளியாகிறது. இதற்காக அந்நாட்டில் பேசப்படும் பகாசா இந்தோனீசிய மொழியில் இப்படத்தை மொழி மாற்றம் செய்ய உள்ளனர்.
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவராக நடித்த படம்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்துக்கு இரண்டு இந்திய தேசிய விருதுகள் கிடைத்தன.
மேலும், அனைத்துலகத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகளையும் வென்றது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்வு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இந்தி மறுபதிப்பை இயக்கி வருகிறார் பார்த்திபன். அதில் அபி ஷேக் பச்சன் நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படம் இந்தோனீசியாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும் பட்சத்தில் மலேசியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பார்த்திபன் சமூக ஊடகங்கள் வழி தெரிவித்துள்ளார்.