அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒமைக்ரான்...

Keerthi
2 years ago
அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒமைக்ரான்...

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்புகள் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளன.

இவற்றில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.  இந்த நிலையில், அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட ஒமைக்ரான் பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என தி சியாட்டில் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் அக்டோபர் 31 வரையில் டெல்டா பாதிப்புகள் அமெரிக்காவை ஆட்டி படைத்தன.  இதனால், இந்த காலகட்டத்தில் 1 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 590 புதிய பாதிப்புகளும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 616 புதிய உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 24ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வெளிஉலகுக்கு தெரிய வந்தது.  அதனை உலக சுகாதார அமைப்பிடமும் தெரிவித்தது.

அந்த தேதியில் இருந்து இதுவரை அமெரிக்காவில், 3 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 600 புதிய பாதிப்புகளும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 750 புதிய உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

ஒமைக்ரான் அலையால் டெல்டா பாதிப்புகளை விட 17 சதவீத கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.