அரசு முழுமையாகப் பதவி விலகி வீட்டுக்குச் செல்லவேண்டும்! - திஸ்ஸ எம்.பி. வலியுறுத்து
"இரு அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்குவதால் மட்டும் இந்த நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக முழுமையாகப் பதவி விலக வேண்டும்."
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார நெருக்கடியும் உருவாகியுள்ளது. மறுபுறத்தில் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. நிர்வாகம் தோல்வி கண்டுள்ளது. எனவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதால் இப்பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அவ்வாறு தீர்ந்தால் அவர்கள் நீக்கப்பட்டமை சிறந்த முடிவாக அமையும்.
எனவே, முழுமையான அரசும் உடனடியாகப் பதவி விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்போது தகுதியான தரப்பு நாட்டை ஆளக்கூடிய சூழ்நிலை உருவாகும்" - என்றார்