ரஷ்யா - உக்ரைன் போர் நீடிப்பு - அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. இதனால் ரஷியாவில் இந்த கார்டுகளை பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 11 ஆயிரத்துக்கும் கூடுதலான வங்கிகள், நிதி நிறுவனங்களை இணைக்கும் ‘ஸ்விப்ட்’ பண பரிமாற்ற முறையில் இருந்து ரஷியாவை வெளியேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் ரஷியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பணம் அனுப்ப முடியாத சூழல் உள்ளது. இப்போது விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்த அறிவிப்பால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவை ரஷியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமேசான் வர்த்தக நிறுவனம் ரஷியா மற்றும் பெலாரசை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சில்லறை தயாரிப்புகளை அனுப்புவதை நிறுத்தியுள்ளது, மேலும் ரஷியாவில் அதன் ஸ்ட்ரீமிங் சேவையான பிரைம் வீடியோவை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்காது என கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், “ரஷியாவை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான பிரைம் வீடியோவுக்கான அணுகலையும் நாங்கள் தற்காலிகமாக நிறுத்துகிறோம், மேலும் நாங்கள் இனி நியூ வேர்ல்டுக்கான வீடியோ கேம் ஆர்டர்களை எடுக்க மாட்டோம், இது ரஷியாவில் நாங்கள் நேரடியாக விற்கும் ஒரே வீடியோ கேம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக, ரஷியாவில் தனது ஒளிபரப்பு சேவையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.