உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களை வாங்கும் ஜெர்மனி
உக்ரைன் மீது ரஷியா இன்று 19-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைனை ரஷியா கைப்பற்றும் பட்சத்தில் ஐரோப்பாவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து 35 அதிநவீன எஃப்-35 ரக போர் விமானங்களை வாங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஜெர்மனி இறங்கியுள்ளது.
போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ உபகரணங்களையும் அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கொள்முதல் நடவடிக்கைகள் வரும் பட்ஜெட் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.