அரசுக்கு எதிராக கொழும்பில் நாளை மாபெரும் போராட்டம்:வடக்கு, கிழக்கு மக்களும் பங்கேற்பு
"பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் போராட்டம் இடம்பெறுகின்றது. இதில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நிலைமை பற்றி எதுவும் சரியாக தெரியவருவதில்லை. நிதி அமைச்சர் நம்பிக்கை இழந்து வருகின்றார். பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
எனவே, இந்த அரசுக்கு மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் நாளை கொழும்பில் மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருந்தும் கொழும்பு நோக்கி வந்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள்" - என்றார்.