அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு: சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Mayoorikka
2 years ago
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு:  சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம், எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை குறைப்பதற்காக எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிதியமைச்சு உள்ளிட்ட தரப்பினரிடம் அறிக்கையை பெறுவதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உயர்நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த சங்கம் முன்வைத்துள்ள 2 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கபுலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்டவற்றின் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இந்த நிலையை விரைவில் தீர்ப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வேலைத்திட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தட்டுப்பாட்டை குறைப்பதற்கு விரைவில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதியரசர்கள் ஆயத்தின் தலைவர் நீதியரசர் முர்து பொர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டார். 

இந்தநிலையில் குறித்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி மீள அழைப்பதற்கு தீர்மானித்த நீதியரசர்கள் ஆயம், அன்றைய தினம் இந்த விடயத்தின் முன்னேற்றம் தொடர்பில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.