அரசுக்கு எதிரான பிரேரணைகளில் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பம்! சஜித் தலைமையில் ஆட்டம் ஆரம்பம்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.
இதன்படி நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவர் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
"அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் இதயத்துடிப்போடு ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து நிற்கின்றது. இதற்காக நாடாளுமன்றத்தில் சாத்தியமான அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் அடைவதற்காக நாங்கள் பாடுபடுவோம். நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தலைகீழாக மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்பட நடவடிக்கை எடுப்போம். அரசமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும்" - என்றார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை கையளிக்கப்படும் எனத் தெரியவருகின்றது. அதன்பின்னரே ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஒப்படைக்கப்படும்.



