இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் யுவதியொருவர் சடலமாக மீடபு: தேடுதல் தொடர்கிறது..

கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 48 பேர் பேருந்து ஒன்றில் நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
நுவரெலியா சென்று மீண்டும் நேற்று (12) வவுனியாவுக்கு திரும்பிய வழியில் இறம்பொடை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டுள்ளனர்.
அதன்போது, அவர்களில் 7 பேர் கொண்ட குழுவினர் குறித்த நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச்சென்றுள்ளனர்.
அவ்வேளையில், திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த சிலர் அவர்களில் நால்வரை காப்பாற்றி கரைசேர்த்துள்ளனர்.
ஏனைய மூவரையும் காப்பாற்ற முற்பட்டபோதிலும் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொத்மலை காவல்துறையினர்இ இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து, காணாமல்போயிருந்த மூவரில் யுவதியொருவரின் சடலம், கற்பாறையொன்றில் சிக்கியிருந்த நிலையில் இன்று (13) காலை மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுசாலினி (21) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மலைநாட்டில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் நீர்நிலைகளின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும்.
எனவே, சுற்றுலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இறம்பொடை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டாலும், அப்பகுதியில் எவ்வித எச்சரிக்கை அறிவித்தல்களும் இல்லை எனவும், மக்களுக்குரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதும் இல்லையென்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



