பரிசாக வந்த ஆபரணத்தை விற்றாரா இம்ரான்கான்? - விசாரணையை தொடங்கிய பாக். அரசு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியில் இருந்தபோது 18 கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் ஆபரணம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆபரணத்தை அரசு பரிசு சேமிப்பு மையத்திற்கு அனுப்பாமல் இம்ரான்கான் தனது சிறப்பு உதவியாளர் ஷபீகர் புஹாரியிடம் கொடுத்துள்ளார்.
அந்த நெக்லசை இம்ரான்கானின் உதவியாளரான ஷபீகர் லாகூரில் உள்ள ஒரு நகைக்கடையில் 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்லார்.
இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து பரிசாக வந்த 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ததாக இம்ரான்கான் மீது அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.
விசாரணையின் முடிவில் அரசுக்கு பரிசாக வந்த ஆபரணம் விற்பனை செய்யப்பட்டதில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் சட்டப்படி, நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள் பெரும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்திடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அந்த பரிசை தங்களிடமே வைத்துக்கொள்ள விரும்பினால் பரிசின் மொத்த மதிப்பில் பாதித்தொகையை அரசுக்கு செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



