இன்றைய வேத வசனம் 25.04.2022: நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து
ஒரு ஓவியன் தேவ பிரசன்னம் நிறைந்த சாந்தம் சந்தோஷம் அன்பு நிறைந்து காணப்படுகின்ற ஒரு முகத்தை வரைய விரும்பினான். அதற்காக அவன் பல இடங்களுக்கு சென்று பலருடைய முகங்களை உற்று கவனித்துப் பார்த்தான். ஆயினும், அவன் எதிர்பார்த்த அளவிற்கு சாந்தம், சந்தோஷம், அன்பு நிறைந்த முகம் காணப்படவில்லை.
பெரிய மனிதர்களின் முகங்களும் சான்றோர்களின் முகங்களும், கூட அவனை திருப்தி படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் இருந்த அவனிடம் நீ எதிர்பார்க்கின்ற குணமெல்லாம் சிறு பிள்ளைகளில் காணப்படும் என்று அவனுடைய நண்பன் கூறினான்.
இது உண்மை என்று உணர்ந்து கொண்ட ஓவியன், பல சிறுவர்களின் முகத்தைப் பார்த்தான். கடைசியாக தன் தாயோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனை அந்த ஓவியன் பார்த்தபோது அந்த சிறுவனின் முகம், தான் நினைத்தது போலவே இருந்தபடியால் அந்த ஓவியனுக்கு மிகுந்த சந்தேஷம் ஏற்பட்டது.
அந்தச் சிறுவனின் தாயிடம் சென்று தனது விருப்பத்தைக் கூறினான். அவர்கள் அனுமதியின் பேரில் அந்த சிறுவனின் முகத்தை அழகாக, தற்சொரூபமாக வரைந்து முடித்தான். அவன் வரைந்த ஓவியத்தை பார்த்தவர்கள், அவனை பெருமையாக உயர்த்திப் பேசினார்கள்.
உண்மையாக நீ நினைத்தது போலவே சாந்தம், சந்தோஷம், அன்பு இந்த ஓவியத்தில் வெளிப்படுகின்றது. என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட ஓவியனின் மனதில் சந்தோஷம் பிறந்தது. இதற்கு பிறகு பல வருடங்கள் உருண்டோடியது. ஓவியனுக்கு திரும்பவுமாய் ஒரு யோசனை தோன்றியது.
அது என்ன யோசனை தெரியுமா? பல வருடங்களுக்கு முன்பாக, நாம் சந்தோஷமுள்ள சாந்தமும், அன்பும் நிறைந்து காணப்பட்ட ஒரு முகத்தை வரைந்தோமே, அது போல இப்பொழுது மிகவும் கொடூரமான, கொலை வெறி நிறைந்த, ஆக்ரோஷமான ஒரு முகத்தை வரைய வேண்டும் என்று நினைத்தான்.
கடந்த முறை செய்தது போலவே அவன் பல இடங்களுக்கு சென்று அப்படிப்பட்ட முகத்தை தேடினான். கிடைக்காததனால் சிறைச்சாலையில் தேடலாம் என்று முடிவு செய்து பல சிறைச்சாலைகளை ஏறி, இறங்கினான்.
ஆனாலும், அவன் நினைத்தது போல மிகக் கொடுமையான முகம் தென்படவில்லை. கடைசியாக, பார்வையாளர்களே அனுமதிக்கப்படாத மரண தண்டனை அளிக்கப்பட்ட சிறைக்கைதிகள் மட்டுமே உள்ள ஒரு சிறைச்சாலைகளுக்குப் போகக் கஷ்டப்பட்டு, போராடி அனுமதி பெற்று உள்ளே சென்றான்.
அங்கு ஒரு வாலிபன் பல கொடுமையான குற்றங்களை செய்ததற்காக மரண தண்டனை பெற்று இருந்தான். அந்த வாலிபனின் முகம் இந்த ஓவியனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் இருந்தது.
சிறைச்சாலை அதிகாரியின் அனுமதி பெற்று, அந்த இளைஞனை எதிரில் அமர்த்தி வரைய ஆரம்பித்தான்.
அந்த வாலிபனின் முகத்தைப் பார்த்தபோது இவனது உடம்பெல்லாம் நடுங்கியது. அவ்வளவு பயங்கரமான தோற்றம். யாரையும் நோகாத ஒரு பார்வை. ஓவியம் வரைய ஆரம்பித்தான்.
அவன் வரய ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்த வாலிபன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். அதைப் பார்த்த அந்த ஓவியனும் சிறைச்சாலை அதிகாரியும் திடுக்கிட்டனர்.
இந்த கொடூரமான வாலிபனா அழுகின்றான்? மற்றவர்களை அழவைத்துப் பார்ப்பவனுக்கு இப்போது என்ன அழகை? இது நிஜமா? அல்லது நடிப்பா? என்று நினைத்தார்கள்.
பிறகு சிறைச்சாலை அதிகாரி அவனைக் கடிந்துகொண்டு, ஏன் அழுகிறாய்? என்று அவனை மிரட்டினார்.
அந்த வாலிபன் ஓவியனை பார்த்து அழுது கொண்டே, ஐயா, உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? பல வருடங்களுக்கு முன்பாக உங்கள் ஆசையின்படி சந்தோஷம், சாந்தம், அன்பும் நிறைந்த ஒரு முகத்தை வரைய நினைத்து, அந்த முகத்தை எங்கும் தேடினீர்கள். கடைசியாக, ஒரு சிறுவனை முகத்தை வரைந்து மிகவும் புகழ் பெற்றீர்கள். அந்த சிறுவன் வேறு யாருமல்ல, நான்தான். என்றான்.
உனக்குள் ஏன் இந்த மாற்றம்? என்று அந்த ஓவியன் அந்த வாலிபனிடம் கேட்டான். அதற்கு அந்த வாலிபன்.
என்னுடைய வாலிபப் பிராயத்தின் பாவங்கள், இச்சைகள், அசுத்தமான நடத்தைகள் என்னை இந்த நிலைமைக்கு மாற்றிவிட்டது. அந்த அன்பான சிறுவன்தான் இப்பொழுது இந்தக் கொடூரமான மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என்று சொன்னான்.
ஆம் நண்பர்களே! பாவம் நம்முடைய ஆத்துமாவை அழிக்கின்றது. நம் சுபாவத்தை மாற்றுகிறது. நம்மை மிருகமாக்கிவிடுகிறது.
நீங்களும் கூட பாவத்தினிமித்தம், விடுதலை பெற முடியாத கட்டுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். மரித்த சடலத்தைப்போல உணர்வற்றவர்களாய் நடந்து கொண்டிருக்கலாம்.
கவலைப்படாதிருங்கள்! இன்று உங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுங்கள். அவருடைய இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் உங்களை விடுவித்து சுத்திகரிக்கும்.
ஆமென்.
யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.