இன்றைய வேத வசனம் 28.04.2022: நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1:4
என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன்.
ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.
சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம்.
யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, … அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?
சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).