மீண்டும் எரிபொருள் விலை உயர்வு? விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

#SriLanka #Fuel #prices
மீண்டும் எரிபொருள் விலை உயர்வு? விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தற்போதைய விலையில் எரிபொருளை வழங்கினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சிடம் இருந்து 550 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின் பின்னரும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த முறை எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போது அமெரிக்க டொலர் 330 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது அது 360 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் நாளாந்தம் 1613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியிருந்தது, ஆனால் தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் மே மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதி 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 87 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசாங்கம் மண்ணெண்ணெய் ஒரு லீற்றருக்கு 313 ரூபாவை செலவழிப்பதாக தெரிவித்த அவர், அரசாங்கம் இன்னும் டீசல் மற்றும் பெற்றோலுக்கு மானியம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் நட்டங்களைக் குறைப்பதற்கும் எதிர்காலத்தில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் LIOC மற்றும் CPC இணைந்து வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.