இன்றைய வேத வசனம் 12.05.2022: என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும். ஏசாயா 48:18
1799ஆம் ஆண்டில் கொன்ராட் ரீட் என்னும் பன்னிரண்டு வயது சிறுவன், வட கரோலினாவில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில், மின்னும் ஒரு பாறையை கண்டெடுத்தான். புலம்பெயர்ந்த ஏழை விவசாயியான தன் அப்பாவிடம் அதை காண்பிக்க வீட்டிற்கு கொண்டுவந்தான்.
அந்த பாறையின் மதிப்பு தெரியாத அவனுடைய அப்பா, அதை கதவு நிறுத்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த வழியாய் அவர்களின் குடும்பம் பல ஆண்டுகள் நடந்துபோயிருக்கிறது.
ஒரு நாள் அந்த ஏழரை கிலோ எடைகொண்ட அந்த தங்கப் பாறையை, அவ்வூரில் வசிக்கும் நகை வியாபாரி பார்த்தார். உடனே இந்த விவசாயக் குடும்பம் செல்வந்தர்களாய் மாறினர். அவர்களுடைய அந்த நிலமே அமெரிக்காவின் தங்கம் கிடைக்கும் முதல் பெரிய நிலமாக அடையாளப்படுத்தப்பட்டது.
சிலநேரம் நம் சுய திட்டங்களையும், வழிகளையும் முன்நிறுத்தி, ஆசீர்வாதங்களை கடந்துபோவதுண்டு. கீழ்படியாமையினால் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், தேவன் இஸ்ரவேலுக்கு மீண்டும் ஒரு மீட்பை அறிவித்தார். ஆனால், அவர்கள் எதில் குறைந்து போயினர் என்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” என்று தேவன் அறிவிக்கிறார். “பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்… இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள்” என்று அவர்களின் பழைய வழியை விட்டு புதிய வழிக்கு திரும்புவதற்கு உற்சாகப்படுத்துகிறார் (எசாயா 48:17-18, 20).
பாபிலோனிலிருந்து புறப்படுவது என்பது, நம்முடைய பழைய பாவ வழிகளிலிருந்து, அவருக்கு செவிகொடுத்தால் நமக்கு நன்மை செய்யக் காத்திருக்கும் தேவனிடத்தில் திரும்புவது என்று பொருள்படுகிறது.