இன்றைய வேத வசனம் 05.06.2022: பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்
இயேசு கிறிஸ்துவின் வார்த்தையில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக பிரதான ஆசாரியர், பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் மற்றும் மூப்பர்கள் அனைவரும் மிகவும் தீவிரமாய் செயல்பட்டார்கள்.
இயேசுவை கொலை செய்யவோ அல்லது மரணத் தண்டனை கொடுக்கக் கூடிய அதிகாரம் பிரதான ஆசாரியருக்கோ அல்லது சனகெரிப் சங்கத்துக்கோ கிடையாது.
எனவே, இவருடைய வார்த்தையில் குற்றத்தைக் கண்டுபிடித்து, ரோம அரசுக்குத் தெரிவித்து, இவருக்கு மரண தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டார்கள்.
நான்கு முக்கியமான கேள்விகள் இயேசுவிடம் கேட்கப்பட்டது.
1.நீர் எந்த அதிகாரத்தினால் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்கிறீர்? (மாற்கு 11:28) இது அதிகாரம் சம்மந்தப்பட்ட கேள்வி.
2.இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா? (மத்தேயு 22:17-21) இது அரசியல் சம்மந்தப்பட்ட கேள்வி.
3.உயிர்த்தெழுதலைப் பற்றியது (மத்தேயு 22:23-32) இது சதுசேயரால் கேட்கப்பட்ட ஆவிக்குரிய கேள்வியாகும்.
4.எது பிரதான கற்பனை? (மத்தேயு 22:35-46) இது நியாயசாஸ்திரி ஒருவனால் கேட்கப்பட்ட நியாயப்பிரமாணம் சம்மந்தப்பட்ட கேள்வி.
இவ்விதமாக இயேசவின் வார்த்தையினால் அவரை குற்றம் கண்டுபிடிப்பதற்காக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் இயேசு சொன்ன பதிலை கேட்ட யூதமதத் தலைவர்கள் ஆச்சரியப்பட்டு பிரமித்து வாயடைத்து மறுதரம் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்கள். அப்புறம் ஒருவனும் அவரிடத்தில் கேள்வி கேட்க துணியவில்லை.
நண்பர்களே, நீங்களும்கூட இயேசுவிடம் கேள்விகளை மட்டுமே கேட்டு கொண்டிராதபடிக்கு, அவர் சொல்வதை நீங்கள் கேட்டு கீழ்படிந்து அதின்படிச் செய்ய முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாகயிருக்கும். ஆமென்!!
மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.