இலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட தகவல்

Prabha Praneetha
2 years ago
இலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட தகவல்

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை அடையாளம்கண்டுகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் விக்கி ஃபோர்ட், பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆழமான கலந்துரையாடல்களை இலங்கை ஆரம்பித்துள்ளதை வரவேற்றுள்ளார்.

பொருளாதாரப் பிரச்சினைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படுத்தும் தாக்கம் உட்பட இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை அதிகாரிகளால் வெளியிடப்படும் அந்நிய செலாவணி தரவு உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு முன்னர் சுற்றுலா மிக முக்கியமான வருமானத்துறையாக காணப்பட்டதாகவும், மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஏறத்தாழ 30 வீதமாக அது அமைந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள எழுத்துமூலமான பதிவில் விக்கி ஃபோர்ட் கூறியுள்ளார்.

எனினும் இலங்கையின் சுற்றுலாத் துறையானது 2020 ஆம் ஆண்டு ஏறத்தாழ 80 வீதத்தாலும் 2021 ஆம் ஆண்டு மேலும் 60 வீதத்தாலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பிரித்தானியா முக்கிய பங்களிப்பு வழங்கி வருவதுடன், கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்ற நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானிய பிரதமர் கலந்துரையாடியுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கை மக்களுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார் எனவும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் விக்கி ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி திட்டம் உட்பட தற்போதுள்ள சமூக பாதுகாப்பு கட்டமைப்புகள், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குகின்றன எனவும் தற்போதுள்ள கடினமான நேரத்தில் இது முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பிரித்தானியா தொடர்ந்து கலந்துரையாடுவதாகவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் முக்கிய தொழில்துறைகள், பொருட்கள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்ற முக்கிய பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!