இலங்கையில் எரிபொருள் வரிசை எப்போது தீரும் – மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
தற்போதைய எரிபொருளற்ற நிலை மேலும் சில காலங்களுக்கு நீடிக்கும் நிலை ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எரிபொருளுக்காக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அது செயற்படுத்தப்படுகின்ற போதிலும், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அவசியமான ரூபா இதுவரையில் கிடைக்கவில்லை.
எவ்வாறேனும் சேகரிக்கப்பட்ட டொலரைப் பெற்றுக்கொள்ள கனியவள கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை.இதுதான் அடுத்த பிரச்சினையாகும்.
அனைத்து எரிபொருளும் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், அடுத்த எரிபொருள் கப்பலைப் பெற்றுக்கொள்வதற்காக ரூபா இல்லாவிட்டால், பாரிய அழுத்தம் உள்ளது.
விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், திறைசேரியிடம் ரூபா கோரப்படுகிறது.மிகவும் தாமதமாக விலை அதிரிக்கப்பட்டமை மற்றும் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும்போது, அதற்கான பணம் கிடைக்காமையால் கனியவள கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குகின்றது.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனம், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக, 217 பில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோருகிறது.திறைசேரியினால் எவ்வாறு ஒரேடியாக 217 பில்லியனை வழங்க முடியும். எனவே, திறைசேரி மத்திய வங்கியிடம் வினவும்.
இந்த நிலையில், வழங்குவதற்கு பணம் இல்லை என மத்திய வங்கி தீர்மானித்தால், டொலர் இருந்தாலும் அதனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யும் வழி இல்லாத நிலை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.