பசிலுக்கு ஏற்பட்டுள்ள நன்மை
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களினால் மக்கள் நம்பிக்கையை இழக்க செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக 30 நாட்களுக்கு மட்டும் சபாநாயகரை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையான காலப்பகுதிக்கு ஜனாதிபதியொருவரை நியமிக்கும் தீர்மானத்திற்கு பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டமையே இந்த அச்சத்திற்கான காரணமாகும்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளது.
அதற்கமைய, அடுத்த ஜனாதிபதியாக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி திட்டமிட்டுள்ளது.
எனினும் சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டின் பேரிலேயே பெயரிடப்படவுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கே அதிகமான பலம் இருப்பதால், அங்கு அவர்களுக்கு அதிக அனுகூலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பசில் ராஜபக்ஷ கூட அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் கடிதத்தை சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.