இந்தியாவில் இருந்து திரும்பிய சவேந்திர சில்வாவின் திடீர் முடிவு!
இலங்கையில் ஏற்பட்டிருந்த உக்கிர களநிலையிலிருந்து அகற்றி வைக்கவே இந்தியாவிற்கு சவேந்திர சில்வா அனுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் வேல்ஸிலிருந்து இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முற்றுகை போராட்டம் உக்கிரமடையப் போகிறது என்பதை அறிந்ததும் 7ம் திகதி இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டிற்கு சவேந்திர சில்வா அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த களமுனையிலிருந்து அவரை அகற்றி வைக்கவே இந்தியாவிற்கு அனுப்பியிருந்தார்கள். ஏனெனில் போராட்டம் வலுப்பெறும் போது இராணுவம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்குமாக இருந்தால் அரசாங்க தரப்பினரின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஒரு அச்ச நிலைமை ஏற்படலாம்.
அத்துடன் அரசாங்க தரப்பினர் தப்பி செல்வதிலும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஒரு மன ஓட்டமாகவும் இருக்கலாம்.
ஆனால் தற்போது இலங்கை அரசாங்கம் முற்றாக விழுந்துள்ள நிலையில் சவேந்திர சில்வா மக்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பு ஒரு கேள்விக்குறியை தான் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஜனாதிபதி பதவி விலகப் போவதாக கூறிவிட்டார்.
பிரதமரும் பதவி விலக தயார் என்பது போன்ற அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இராணுவத்தினர் இதனை தெரிவிப்பது ஒருவேளை இராணுவம் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கருத்தாக தான் நாம் இதனை எடுக்கலாம் என கூறியுள்ளார்.