ரணில் விக்ரமசிங்க அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறாத நிலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றமை தொடர்பாக, இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
"எரிபொருளுக்காக மக்கள் நாள் கணக்கில் வீதியில் நிற்கின்ற நிலையில், கிடைக்கின்ற எரிபொருளையும் தாமதப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமையுமாயின், மின்வெட்டு உட்பட்ட பல மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ள நேரிடும்.
தற்போதைய நிலையில் நாடடின் நலன் கருதி அமைச்சரவையின் ஒத்துழைப்புடன், பிரதமர் விடயங்களை கையாள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.