இலங்கையில் தொடரும் பதற்ற நிலை - முப்படையினர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !
நாட்டில் புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் வரை அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு நாட்டின் தேசிய சொத்துக்கள் , தனியார் அல்லது அரச சொத்துக்கள் என்பவற்றுக்கு சேதம் விளைவிப்பதை தவர்த்துக் கொள்ளுமாறும் பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியமை என்பவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் இணைந்து விசேட அறிவிப்பினை வெளியிட்டனர்.
இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டின் முப்படையினர் மற்றும் பொலிஸார் தற்போதுள்ள அரசியலமைப்பிற்கு அமைய செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13 ஆம் திகதி பதவி விலகுவதாக சபநாயகர் எமக்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் பதவி விலகலுடன் , எதிர்வரும் நாட்களில் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படும் வரை குறித்த காலப்பகுதிக்குள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாம் அவருடன் கலந்துரையாடினோம்.
அனைத்து கட்சி தலைவர்களுடனும் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்து , அரசியல் ரீதியாக ஜனாதிபதியொருவரை நியமிக்கும் வரை நாட்டு நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்துமாறு முப்படை தளபதிகளும் பொலிஸ்மா அதிபரும் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கமைய அரசியல் ரீதியாக எடுக்கப்படும் தீர்மானம் குறித்து எமக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டோம்.
இது தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று நம்புகின்றோம். எனவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு , அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை அமைதியைப் பேணுமாறு இளைஞர்கள் உட்பட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பொது மக்களிடம் கேட்டு;க் கொள்கின்றோம்.
அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு;க் கொள்கின்றோம். அதற்கமைய நாட்டின் தேசிய சொத்துக்கள் , தனியார் அல்லது அரச சொத்துக்கள் என்பவற்றுக்கு சேதம் விளைவிக்காமல் முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.