4 இராணுவ விரர்களை தூக்கிச்சென்ற போராட்டக்காரர்கள்! நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம்
நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த சிறிலங்கா இராணுவத்தினர் 4 பேரை போராட்டக்காரர்கள் தூக்கிச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருக்கும் காவல்துறையினரும் துப்பாக்கி பிரோகங்களை மேற்கொண்டு முன்நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரன்டு வீதித்தடைகளை தகர்த்து நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, இன்னும் இரு வீதித்தடைகளே நாடாளுமன்றத்தை அடைய இருக்கின்ற போதிலும், அந்த வீதித்தடைகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக கோரி இன்று இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் தற்பொழுது நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பிரதமர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் அளவில் போராட்டக்காரர்கள் பிரதமரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும், நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.