இன்றைய வேத வசனம் 14.06.2022: உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
கொக்கு, நாரை, குருகு என்னும் பறவைகள் நம்முடைய கிராமப்புற வயல்வெளிகளில் வாழ்கின்றன.
இவைகள் ஏர் உழும்போது மாடுகள் பின்னாலேயே செல்லும்.
மாடுகள் காலை எடுத்தவுடன் அந்த இடத்திலிருந்து புழு பூச்சிகள் வெளிப்படும்பொழுது இப்பறவைகள் அவைகளைப் பிடித்துத் தின்னும்.
இவற்றின் தனித்தன்மை என்னவென்றால், ஒரு ஜோடியில் ஒன்று இறந்துப் போனாலும் இன்னொன்று கத்தி கத்தியே இறந்து போகுமாம்.
இப்பறவைகளிடம் நாம் கற்றுக்கொள்ளும் காரியங்கள் சிலவற்றை இன்று பார்ப்போம் வாருங்கள்!
காத்திருப்பு:-
- கொக்கு தண்ணீர் கரையில் மீன்களுக்காக காத்திருக்கும் முறை வியக்கத்தக்கது. ஏனென்றால் ஒற்றைக்காலில் நின்று ஆடாமல் அசையாமல் நிற்கும் கொக்கு மிக பொறுமையாக காணப்படும். நல்ல கொழுத்த மீன் அதன் காலண்டை வந்தவுடன் அதை கொத்திக் கொள்ளும்.
- ஆனால் மனிதர்களாகிய நமக்கு, நம் ஜெபத்திற்கு உடனடியாக பதில் வரவில்லை என்றால் சோர்ந்து போய்விடுகிறோம்.
- கொக்கு உணவை பெற்றுக்கொள்ள பொறுமையுடன் காத்திருப்பது போல, நாமும் கர்த்தரின் வேளைக்காக ஒவ்வொரு காரியத்திலும் காத்திருப்போமானால் எல்லாவற் றிலும் சிறந்ததையே நாம் நம் வாழ்வில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்" (#எரேமியா 8:7).
ஆயத்தம்:-
- கொக்கு முதலிய பறவைகள் தங்களுடைய (MIGRATION) புலம் பெயர்வு அல்லது மண்டல பெயர்வை நன்றாக அறியும்.
- புலம் பெயர்ந்து வந்து தங்கியிருக்கும் இடம் நிரந்தரமானதல்ல என்ற அறிவு அவைகளுக்கு இருக்கிறபடியால் ஏற்றவேளை வரும்போது, தாம் தங்கி மகிழ்ந்த வீட்டை விட்டு விட்டு தங்களது சுய பிரதேசத்தை நோக்கி மகிழ்ச்சியோடு பறந்து செல்கின்றன.
- நமக்கும் இந்த உலகம் நிரந்தரமானது அல்ல, நம் சுயதேசம் பரலோகமே என்ற புரிதல் நமக்கு மிக அவசியம். இதை வாசித்துக்கொண்டிருக்கும் நண்பர்களே! பரலோகத்தில் தேவனைச் சந்திக்க உங்களுடைய ஆயத்தங்கள் எப்படிப்பட்டதாய் உள்ளது?
"பரலோகம் செல்வது குறித்து எண்ணும்போதெல்லாம் உங்கள் இருதயத்திற்கு பயத்தை உண்டுப்பண்ணுகிறதா? அல்லது அங்கு நான் மகிழ்ச்சியுடன் செல்வதற்கு எந்நேரமும் ஆயத்தம் என்ற மனநிலையில் உள்ளீர்களா? சற்று சிந்தியுங்கள்!"
"உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு" (ஆமோஸ் 4:12). ஆமென்!!