கோட்டாபய ஐக்கிய அரபு ராச்சியத்தை தெரிவு செய்தது ஏன்?
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு தனது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது விருப்பமான இடமாகத் தேர்ந்தெடுத்தமை ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் பாரசீக வளைகுடா நிதி மையத்துடன் உள்ள உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ச குடும்பத்தின் தவறான மேலாண்மை காரணமாக இலங்கை நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு உள்ளாகியது.
சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவண விவகாரம்
இது, ஜனாதிபதியையும் அவரது சகோதரர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் மேலும் தனிமைப்படுத்தியது. ஏற்கனவே சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு தலைமையிலான கடல்சார் நிதி தொடர்பான உலகளாவிய விசாரணையான பண்டோரா ஆவணத்தில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.
ஆளும் குடும்பத்தின் வாரிசான நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இரகசிய ஷெல் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பயன்படுத்தி 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான வரிச் சொர்க்கங்களை குவித்து, லண்டன் மற்றும் சிட்னியில் கலைப்படைப்புகள் மற்றும் சொகுசு சொத்துக்களை எப்படி வைத்திருந்தனர் என்பதை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தின.
14 வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து கசிந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள், இந்த தம்பதியருக்கு ஐக்கிய அரபு இராச்சிய சொத்துக்களுடன் இரகசிய உரிமை உறவுகள் இருப்பதைக் காட்டுகின்றன.
செல்வத்தை மறைக்க பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ள இடம்
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நடேசன் தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் துபாயில் வசிப்பவர்கள் என்பதை, ஐக்கிய அரபு ராச்சிய குடியுரிமை அடையாள அட்டை மற்றும் பிற பதிவுகள் என்பன உறுதிப்படுத்தின.
2016 ஆம் ஆண்டு துபாயை தளமாகக் கொண்ட வியாபாரியின் மேலாளராக கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நடேசன், தனது ஷெல் நிறுவனங்களில் ஒன்றின் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தில் மற்றொரு துபாய் முகவரியை தனது வசிப்பிடமாக பட்டியலிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபரில் தம்பதியினரின் கடல்சார் சொத்துக்கள் பற்றிய பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது அரசாங்கம் இந்த விடயத்தை விசாரணை செய்யும் என்று அறிவித்தார்.
எனினும் அது தொடர்பில் உரிய தகவல்கள் பின்னர் வெளியாகவில்லை. இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், ஐக்கிய அரபு இராச்சியம், தன்னலக்குழுக்கள் மற்றும் குற்றவாளிகள் தங்கள் செல்வத்தை மறைக்க பாதுகாப்பான புகலிடத்தை தேடும் ஒரு பிரபலமான இடமாக மாறியுள்ளது என்று சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரபு இராச்சியத்தை தெரிவு செய்தமைக்கும் இந்த வர்த்தகங்களுக்கும், தொடர்புகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.