ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு இன்று (15) காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (14) இரவு தமக்குக் கிடைத்த ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின் சட்டபூர்வமான தன்மை தற்போது ஆராயப்பட்டு வருவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தற்போது கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இறுதித் தீர்மானம் இன்று காலை சபாநாயகரிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட குறித்த கடிதம் சபாநாயகருக்கு நேற்று கிடைக்கப்பெற்றதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதன் துல்லியத் தன்மை குறித்து மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நிறைவுசெய்யப்பட்டதை அடுத்து, அது தொடர்பாக இன்றைய தினத்திற்குள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தூதரகம் ஊடாக நேற்றைய தினம் மின்னஞ்சல் மூலமாக குறித்த கடிதத்தின் பிரதி சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதன் மூலப்பிரதி இன்றைய தினம் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், குறித்த கடிதம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் பதில் ஜனாதிபதியாக, சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும், ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் ஜனாதிபதி செயலகம் நேற்றிரவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து, சவுதி அரேபியாவுக்கு சொந்தமான SAV788 என்ற விமானத்தில் நேற்று சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இந்த நிலையில், அவர் சிங்கப்பூரிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் அல்லது வேறு ஒரு இலக்கு அவர் மனதில் இருக்கிறதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் புகலிடம் கோரவில்லை என்றும், அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ சமூக வருகை அனுமதியில் இருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.