இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இராணுவ வீரர்
பொல்துவ சந்தியில் நேற்றுமுன் தினம் (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த இராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நேற்று பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெல்லவாய இராணுவ முகாமின் இராணுவ வீரர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட காவல்துறை குழுவொன்று இராணுவ வைத்தியசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ வீரரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.