ரணில் ஜனாதிபதியானால் பிரமராகும் பசில்
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை திடீரென நடக்காது எனவும் படிப்படியாக நடக்கும் எனவும் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உள்ளது.
தற்போது முழு அரசாங்கக் கட்சிப் பொறிமுறையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையிலேயே உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கும் வாக்கெடுப்பு பிரசாரமும் பசில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படுகிறது.
டலஸ் - சஜித் இணைந்து போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்புடன் பலரிடையே பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பசில் பின்வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் முன்வைத்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் ஓரளவு குறைக்கப்பட உள்ளதாகவும், அதில் பலமடையும் பிரதமர் பதவிக்கு பசில் ராஜபக்ஷ முன்வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.