நோய்வாய்ப்பட்ட நாட்டுக்கு மீண்டும் எழ முடியாது!
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் உரையாற்றினார்.
அதன்போது அவர் தெரிவித்த கருத்துக்கள்,
தொடர்ந்தும் இந்த ஜனாதிபதி பதவி என்பது ஒரு ஆபரணமாகவும் கௌரவமாகவும் சொத்தாகவும் கருதி நாங்கள் ஒரு அணியாக இந்த ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் நாம் அனுபவித்த வஞ்சனையான அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை முன்நிறுத்தியே போட்டியிட்டோம்.
வாக்குகளில், இலக்கங்களில் அடைந்த தோல்வியை நான் தோல்வியாக கருதவில்லை. தைரியமான வழிக்காட்டலாக கருதுகிறேன். எமக்கு உதவிய, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியது போல், சுதந்திரத்திற்கு பின்னர் எமது தாய் நாடு மிக மோசமான காலகட்டத்தை தற்போது எட்டியுள்ளது.
ஆரோக்கியமாக உள்ள நாட்டுக்கு மீண்டும் எழ முடியும். நோய்வாய்ப்பட்ட நாட்டுக்கு மீண்டும் எழ முடியாது. இதற்கு எமது அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். நாம் எப்போது இந்த தியவன்னா தீவில் இருக்கும் 225 குடும்பங்களை மாத்திரம் பற்றியே சிந்தித்தோம்.
இப்போது நாங்கள் தியவன்னாவுக்கு வெளியில் இருக்கும் 58 லட்சம் குடும்பங்கள் பற்றி சிந்தித்தோம். இதனால், ஒன்றாக ஒன்றிணைய வேண்டும். இந்திய பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்த தீவில் வாழும் 22 மில்லியன் மக்களும் எம்முடன் ஒன்றிணைவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை அற்று போயுள்ள சந்தர்ப்பத்தில், நாம் அரசியல் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.