சீருடை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அந்த வழக்கில் இருந்து விடுதலை
யாழ் மாநகரசபை காவல் பணியாளர்களுக்கான சீருடை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த வழக்கை தொடர முடியாது என அறிவித்தமையால் யாழ் மாநகர முதல்வர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கில் சான்று பொருளாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த சீருடைகளும் விடுவிக்கப்பட்டன. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
புலிகள் அமைப்பின் காவல் பிரிவுக்கு ஒப்பான ஆடையே மாநகரசபை காவல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.