இரண்டு வாரத்தில் சர்வ கட்சி ஆட்சி.. தினேஷின் பிரதமர் பதவி பறிபோகலாம்...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருகின்றதுடன், சர்வகட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூடி இது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான சமகி ஜனபலவேக சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் சஜித் பிரேமதாச அல்லது அக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அப்படியானால், தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் தினேஷ் குணவர்தனவின் பதவியும் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.