இலங்கை மாணவர்களுக்கு தடை விதித்த பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்

Kanimoli
2 years ago
இலங்கை மாணவர்களுக்கு தடை விதித்த பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்

பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அங்கு கல்வி கற்க விசா கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள புதிய தொகுதிகளுக்கான பாடநெறிகளுக்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

 உரிய நேரத்தில் செலுத்தப்படாத பாடநெறிக் கட்டணம்
அந்த அறிவிப்பின்படி, தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல இலங்கை மாணவர்கள் தங்களது பாடநெறிக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியுள்ளனர். இதனால், மாணவர்கள் கற்கை செயற்பாட்டில் இருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும், பிரித்தானிய விசா மற்றும் குடிவரவு அலுவலகத்தில் மாணவர்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கும் அபாயம் உள்ளதாகவும் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெளிவான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் 
ஏற்கனவே விண்ணப்பம் ஏற்கப்பட்ட மாணவர்கள் மீதமுள்ள கல்விக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த தெளிவான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

50 சதவீதத்தை முன்பணமாக செலுத்திய மாணவர்கள் மீதித் தொகையை செலுத்த இயலவில்லை என நினைத்தால் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மாணவர்கள் 2023 ஜனவரி - பெப்ரவரி மாதத் தொகுதிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும், அவர்கள் சேர்க்கையின் போது முழு பாடக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.