சர்வதேச நீதிமன்றில் ரணில்
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டக்காரர்கள் சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதும் சில சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஊடக அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளின் அமைப்புகள் தனித்தனியாக முறைப்பாடுகளை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறன்றது.
கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இதன் போது பல போராட்டக்கராக்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாவும், அவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.
மேலும் படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்த சட்டத்தரணிகள் பலரும் தாக்குதலுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கான பின்புலத்தில் ரணிலின் ஆசை இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஸ்ரீலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் தாக்குதல் நடந்த தினமன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவிருந்தது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடித்தனர் என கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.