கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றம் தொடர்பாக கைது செய்யுமாறு கோரிக்கை

Kanimoli
2 years ago
கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றம் தொடர்பாக கைது செய்யுமாறு கோரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றம் தொடர்பாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், முற்றிலும் செவிவழிச் சாட்சியங்களின் அடிப்படையில், ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகள் என அதிபர் சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச படுகொலைகள் உட்பட பல கொடூரமான குற்றங்களுக்கு காரணமான விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை, கோட்டாபய, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அதன் மூலம் சில தரப்பினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்கான பொறுப்பில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விடுபட முடியாது எனவும் அதிபர் சட்டத்தரணி மனோகர டி சில்வா, புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்டியுள்ளார்.

இந்தநிலையில் முன்னாள் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, குறிப்பிட்ட தரப்பினருக்கு உதவும் வகையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம் எனவும் மனோகர டி சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி அயோமா மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் ஜூலை 14 அன்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

எனினும் அங்கு அவருக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசாங்கம், முன்னாள் அதிபரை பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அவர் சிறிலங்காவில் வாழ்வதற்கு அரசின் பாதுகாப்பில் தங்குமிடங்கள் உட்பட போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரியுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள், இலங்கை தொடர்பில் அமைத்த, தாருஸ்மன் குழு உறுப்பினரான, யஸ்மின் சூக்கா ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆவார், அவர் இலங்கையின் போர்க்கால அரசியல் மற்றும் இராணுவத் தலைமைக்கு எதிராக பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், முன்னாள் அதிபருக்கு எதிரான ITJP நடவடிக்கையானது, ராஜபக்சக்களை அகற்றுவதற்கான மேற்குலக முயற்சிகளின் பின்னணியாக இருக்கலாம் எனவும், அது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் மியன்மாருக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.