உரத்தை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்த விவசாய சங்கத்தின் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது
மஹஓய விவசாய சேவை திணைக்களத்தின் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உரத்தை வேறு ஒரு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாய சங்கத்தின் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மஹஓய பிரதேச விவசாய சேவைகள் திணைக்களத்தில் மஹஓய பிரதேச விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உரப்பொதிகள் திருடப்பட்டுள்ளதாக விவசாய சேவை அலுவலக அதிகாரி ஒருவரால் மஹஓய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் மூவர், செயலாளர் மற்றும் அதற்கு உதவியாக செயற்பட்ட ஒருவர் உட்பட ஐவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூலம் 50 கிலோ அடங்கிய 111 உரப்பொதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனை மூலம் பெறப்பட்ட 277,000 ரூபாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தெஹியத்த கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் .
சம்பவம் தொடர்பில் மஹஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.