தடைகளை தகர்த்த ரணில் - ஐ.எம்.எப் ஆதரவிலும் திருப்பம்
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைப்பது, இலங்கையின் கடன் கடனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும் என ஃபிட்ச் கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை எதிர்பார்த்துள்ளதாலும், தனியார் மற்றும் உத்தியோகபூர்வமான கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு முயற்சியை மேற்கொள்வதனாலும் இலங்கை, பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபர் நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை உறுதி செய்துள்ளதாகவும் அவரது அரசாங்கம் சில எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் ஃபிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் போதுமான ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கையை ரணில் விக்ரமசிங்கவிற்குள்ள ஆதரவு ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை பெறுவதற்கான தடையை நீக்கலாம் என்பதுடன், இது இலங்கை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முக்கியமானது எனவும் ஃபிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிலைப்பாடு வலுவாகத் தோன்றினாலும் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு பலவீனமாக உள்ளது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனவும் ஃபிட்ச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சூழலின் கீழ், பொருளாதார நிலைமைகள் மேம்படாத பட்சத்தில் அல்லது சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படுமாயின், அது மேலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இணக்கம் காணும் உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகள், அதிக வரிகள், செலவீன கட்டுப்பாடுகள், பரிமாற்ற வீத நெகிழ்வுத்தன்மைக்கான அதிகளவு கடப்பாடு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய சீர்திருத்தங்கள் பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அவை செயற்படுத்தப்படுவதைத் தடுக்கும் அபாயம் உள்ளது எனவும் ஃபிட்ச் கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாயண நிதியத்தின் பொருளாதார மீட்பிற்கான கடன் உதவியை பெறாத பட்சத்தில் இலங்கை மிகவும் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட செலுத்த வேண்டிய அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் இலங்கை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பொதுக் கடனானது தாங்க முடியாத ஒன்று என மதிப்பிட்டிருந்த சர்வதேச நாணய நிதியம், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இலங்கையின் கடனாளிகளிடமிருந்து போதுமான நிதி உத்தரவாதங்கள் தேவைப்படும் என கூறியிருந்தது எனவும் ஃபிட்ச் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனால், கடன் பேச்சுவார்த்தைகள் சிக்கலாக இருக்கலாம் எனவும் இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் 13 வீதத்தை சீனாவிடம் இருந்தே இலங்கை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஃபிட்ச் கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.