அதிகரிக்கும் துவிச்சக்கரவண்டிப் பாவனை
துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், துவிச்சக்கர வண்டிகளுக்காக பிரத்தியேக ஒழுங்கை முறைமை முன்னோடி வேலைத்திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு இலங்கை வங்கி மாவத்தைக்கு முன்னால் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை வங்கி மாவத்தையில், துவிச்சக்கர வண்டிகளுக்காக, பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தில், இலங்கை வங்கி மாவத்தைக்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையிலும், துவிச்சக்கரவண்டி ஒழுங்கை முறைமை நடைமுறையாகவுள்ளது.
ஒழுங்கை முறைமை ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரான பொறியியலாளர் பீ.ஏ. சந்ரபால தெரிவித்துள்ளார்.
இதன்படி, தும்முல்லை சுற்றுவட்டம், நகர மண்டபம், சுதந்திர சதுக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி துவிச்சக்கர வண்டிகளுக்காக, பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்