நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை - உலக வங்கி

Kanimoli
2 years ago
நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை - உலக வங்கி

நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

எனினும் இலங்கையிலுள்ள ஏழ்மையான மக்களுக்கான உதவிகளை தற்போது அதிக கரிசனையுடன் வழங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்குவதற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையை நிறுவுவதற்கு, அதனை செயல்படுத்தும் முகவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.

அத்துடன் இலங்கை மக்களுக்கு தமது ஆதரவை அதிகரிக்கும் வகையில் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.