60 இலட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை: சுகாதார அமைச்சு
இலங்கையின் சனத்தொகையில் 20 வயதிற்கும் மேற்பட்ட 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் பூஸ்டர் (Booster) தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை மீளவும் அதிகரித்து வரும் நிலையில், இது அவதானம் மிகுந்த நிலையை தோற்றுவித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே கூறினார்.
அத்துடன், கொரோனா தடுப்பூசியை அனைவரும் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு தேவையான Pfizer தடுப்பூசிகள் அரசாங்க களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டினார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு தடுப்பூசிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவடைவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.
முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசியை பெற்று ஒரு வருடம் முழுவதுமாக கடந்துள்ள நிலையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.